அனுப்பர்பாளையம்:
திருப்பூர் சாமுண்டிபுரத்தை அடுத்த சாரதாநகர் பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 29). மீன் வியாபாரி. இவருடைய நண்பர்களான அஜ்மீர் காஜா, உதயகுமார், முகமது ஹக்கீம், ரியாஸ், அப்துல் சமத் ஆகியோருடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். மேலும் தொழில்சம்பந்தமாக சதாம் உசேன்அஜ்மீர் காஜா, முகமது ஹக்கீம் ஆகியோரிடம் கடன் வாங்கிஉள்ளார். நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காஜா உள்ளிட்டோர் சதாம் உசேனை மது குடிக்க வஞ்சிபாளையம் மேம்பாலம் அருகில் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காஜா, உதயகுமார், முகமது ஹக்கீம், ரியாஸ், அப்துல் சமத் ஆகியோர் சேர்ந்து சதாம் உசேனை கத்தியால் வெட்டி, உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த சதாம் உசேனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது காஜா உள்பட 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். முன்னதாக முகமது காஜாவை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றபோது, அவர் 2 மோதிரங்களை விழுங்கினார். இந்த நிலையில் நேற்று அறுவை சிகிச்சை மூலமாக முகமது காஜா விழுங்கிய மோதிரங்களை மருத்துவக் குழுவினர் உடலில் இருந்து வெளியேற்றினார்கள்.