பைனான்சியர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது

அரிமளம் அருகே பைனான்சியர் கொலை வழக்கில் பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கூலிப்படையினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-27 18:08 GMT

அரிமளம்:

பைனான்சியர் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கல்லூர் ஊராட்சி தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாங்குடி (வயது 46). இவர் பைனான்ஸ் மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 20-ந் தேதி தனது தோட்டத்தில் வளர்த்து வரும் மஞ்சுவிரட்டு காளையை பராமரித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாளால் மாங்குடியை வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் உள்பட 5 பேர் கைது

இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் மாங்குடி கொலை தொடர்பாக தெக்கூர் கிராமத்தை சேர்ந்த அன்னக்கொடி (வயது 38), இளங்கோ (19), சிவா (22), கருப்பையா (45) மற்றும் 18 வயதுடைய ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் திருமயம் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இந்த கொலை சம்பவத்தில் முதலில் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் 5 பேர் தொடர்புடையவர் என உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கூலிப்படையினருக்கு வலைவீச்சு

கடந்த தீபாவளி அன்று மாங்குடிக்கும், 18 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் மாங்குடி, சிறுவனின் விரல்களை வெட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சிறுவன் உள்பட 5 பேர் கூலிப்படையை வைத்து மாங்குடியை கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட கூலிப்படையினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்