சிறுமியின் தந்தை உள்பட 5 பேர் கைது

பஸ் டிரைவர் வெட்டிக்கொலை வழக்கில் சிறுமியின் தந்தை உள்பட 5 பேர் கைது

Update: 2022-07-01 13:34 GMT

தூசி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 33), தனியார் பஸ் டிரைவர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகன் 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 23-ந் தேதி முருகன் ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை முருகன் தனது வீட்டின் பின்புறம் உள்ள தைல மரத்தோப்புக்கு சென்றார்.

அப்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் சேர்ந்து முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை, தாய், 2 சகோதரர்கள், உறவினர் ஒருவர் என 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்