திருத்தணி அருகே சாலை விபத்தில் தாய்-மகன் உள்பட 5 பேர் படுகாயம்

திருத்தணி அருகே ஏற்பட்ட சாலை விபத்துகளில் தாய், மகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-03 11:01 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸ் சாலை பகுதியில் வசிப்பவர் கார்த்திக் (வயது 33). இவர் தனது நண்பரான கீழ் முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனிராம் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் தடுக்குப்பேட்டைக்கு சென்று விட்டு, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த தடுப்பு வேலியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முனிராம் மட்டும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல், திருவள்ளூர் அல்லிக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி மோகனா (60). இவர் தனது மகன் முனுசாமி (35) உடன் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திற்கு சென்று விட்டு திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தனர். திருத்தணி புதிய புறவழிச்சாலை பகுதி அருகே மோட்டார் சைக்கிளிள் வந்தபோது, எதிர் திசையில் திருத்தணி கடப்பா ட்ரங்க் ரோடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த 3 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்