நூதன முறையில் கஞ்சா விற்ற கூரியர் ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது

நூதன முறையில் கஞ்சா விற்ற கூரியர் ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-19 18:35 GMT

திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் கொட்டபட்டி பிரிவு அருகே தனியார் அலுவலகத்தில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக ஐ.ஜி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி, தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் சோதனை செய்தபோது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சாவை பொட்டலம் போட்டு கொண்டிருந்தனர். மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மவுன்ஸ்புரத்தை சேர்ந்த லோக மணிகண்டன் (வயது 25), நத்தத்தை சேர்ந்த செல்வமருதநாயகம் (25) என்பதும், கூரியர் அலுவலகத்தில் வேலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், ஒய்.எம்‌.ஆர் பட்டியை சேர்ந்த விஜயகுரு (30), சுப்புராமன் பட்டறையைச் சேர்ந்த தீபக் (21), இசக்கிபாண்டி (20) ஆகிய 3 பேரிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி அதை பொட்டலங்கள் போட்டு, பார்சல் டெலிவரி செய்வதுபோல் நூதன முறையில் கஞ்சாவை வீடுகளில் டெலிவரி செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுரு, தீபக், இசக்கிபாண்டி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்