கஞ்சா விற்ற கல்லூரி மாணவி உள்பட 5 பேர் கைது
சரவணம்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சரவணம்பட்டி
சரவணம்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கஞ்சா விற்பனை
கோவை சரவணம்பட்டி பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்்போது அந்த பகுதியில் தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
கல்லூரி மாணவி உள்பட 5 பேர் கைது
இதில் அவர்கள், கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் ஜனார்த்தனன் (21), துரைசாமி என்பவரது மகன் சபரீஷ் (19), கோவில்பாளையம் பாலாஜிநகரை சேர்ந்த கோகுல் என்ற சாண்டி கோகுல் என்பவரின் மனைவி லோகேஸ்வரி என்ற அபி, சரவணம்பட்டி ஜனதாநகரை சேர்ந்த முகமது பாஷா என்பவரது மகள் ஆசினா (21), வரதய்யங்கார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் சந்தியா (20) என்பதும், இவர்கள் குடும்ப செலவுக்காக கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதில் சபரீஷ் சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டும், சந்தியா கே.ஜி. கல்லூரியில் பி.காம். படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.