ரூ.12 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்த முயன்ற 5 பேர் கைது

குளச்சலில் ரூ.12 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்த முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-08-11 18:00 GMT

குளச்சல்:

குளச்சலில் ரூ.12 கோடி மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்த முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் கடத்தல்

திமிங்கல உமிழ்நீர் கட்டிகளுக்கு வெளிநாட்டில் கடும் கிராக்கி உள்ளது. இதனால் அந்த கட்டிகளை கடத்தும் கும்பல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்து திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்த முயன்றதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பல் சிக்கியது. இந்தநிலையில் நேற்று மேலும் ஒரு கும்பல் கைதாகியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

5 பேர் சிக்கினர்

மண்டைக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குளச்சல் காந்தி சிலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 5 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை நோக்கி சென்றனர். இதனை பார்த்த 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குளச்சல் ஆசாத் நகரை சேர்ந்த டேனியல் (வயது 21), மிடாலம் பிபின் (32), மத்திக்கோடு அரவிந்த் (26), ஜெனித் (31), திக்கணங்கோடு அஜித் (31) என்பதும், திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை கடத்தும் கும்பல் என்பதும் தெரியவந்தது.

அந்த கும்பலிடம் சுமார் 6 கிலோ எடையுடைய திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் இருந்தது.

பறிமுதல்

பின்னர் போலீசார் திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு ரூ.12 கோடி ஆகும். மேலும் வாலிபர்கள் பயன்படுத்திய கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து போலீசார் பிடிபட்டவர்களை குலசேகரம் வனச்சரக அலுவலர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் 5 பேரை கைது செய்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் எங்கிருந்து கடத்தப்பட்டது? இந்த கும்பலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்