ரூ.57½ லட்சம் தங்க கட்டிகளுடன் 5 பேர் தலைமறைவு

கோவையில் 3 நகைப்பட்டறைகளில் ரூ.57½ லட்சம் தங்க கட்டிகளுடன் மாயமான 5 பேர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-23 18:45 GMT

கோவை

கோவையில் 3 நகைப்பட்டறைகளில் ரூ.57½ லட்சம் தங்க கட்டிகளுடன் மாயமான 5 பேர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகைப்பட்டறை

கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே. தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 46). இவர் அந்த பகுதியில் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 3-ந் தேதி ரமேஷ்பாபு தனது பட்டறையில் வேலை பார்க்கும் வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர் பாபு சோனா சமந்தார் (28) என்பவரிடம் ரூ.13 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான 327 கிராம் தங்க கட்டிகளை கொடுத்து அதனை நகை ஆபரணமாக செய்து தரும்படி கொடுத்தார்.

ஆனால் தங்க கட்டிகளை பெற்ற பாபு சோனா சமந்தார் தனது நண்பர்களான கோஷ் மற்றும் சமர் ஆகியோருடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்பாபு ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தலைமறைவான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

வழக்குப்பதிவு

இதேபோல், கோவை ஆர்.எஸ்.புரம் வள்ளியம்மாள் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (55). நகைப்பட்டறை உரிமையாளர். இவர் வழக்கமாக ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கவுரவ் கபிராஜ் (38) என்பவரிடம் தங்க கட்டிகளை கொடுத்து நகை ஆபரணமாக பெறுவது வாடிக்கை. இதேபோல் கடந்த 6-ந் தேதி பிரவீன் ரூ, 34 லட்சத்து 3 ஆயிரத்து 480 மதிப்பிலான 850.8 கிராம் தங்க கட்டிகளை கொடுத்தார். ஆனால் தங்க கட்டிகளை பெற்றுக்கொண்ட கவுரவ் கபிராஜ் அதனை ஆபரணமாக செய்து கொடுக்காமல் தங்க கட்டிகளுடன் தலைமறைவானார். இது குறித்து பிரவீன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை எல்.ஐ.சி காலனி சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் பாபு (35). நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் செல்வபுரம் ராஜேஷ்வரி நகரை சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தார். பாபுவிடம் தங்க நகைகளை வாங்கி பிரபாகரன் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 250 கிராம் தங்க நகைகளை விற்பனை செய்து தருவதாக பாபுவிடம், பிரபாகரன் தங்க நகைகளை வாங்கி உள்ளார்.

இந்த நகைளில் 60 கிராம் தங்க நகைகள் மட்டும் விற்பனை செய்ததாக கூறி ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்தை பாபுவிடம் கொடுத்தார். மீதமுள்ள 190 கிராம் எடையுடைய ரூ.10 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான தங்க நகையை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இது குறித்து பாபு செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் 3 நகைப்பட்டறை உரிமையாளர்களிடம் ரூ.57½ லட்சம் தங்கம் மோசடி செய்த 5 பேர் தலைமறைவாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்