ரூ.171 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள்; காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்-அமைச்சர்

திருவண்ணாமலை, சேலம் உள்பட 5 மாவட்டங்களில் ரூ.171.24 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-06-27 12:16 GMT

சென்னை:

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூ.171.24 கோடி மதிப்பில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 5 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோல், தண்டரையில் உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் ரூ.2.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டிடம் ஆகியவற்றை, சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து, புதிய தொழிற்பேட்டைகளின் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார்.

புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் முனைவோர் உடனடியாக தொழில் தொடங்க ஏதுவான வசதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் உருவாக்குதல், தொழில்முனைவோர் குழுமங்களுக்கு பொது வசதி மையங்கள் ஏற்படுத்துதல், தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் நடந்து வருகிறது.

இதன் மூலம் மொத்தம் 7 ஆயிரத்து 200 பேர் நேரடியாகவும், 15 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெற உள்ளனர்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி. அருண்ராய், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி. ஆனந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்