மேலும் 5 கடைகளுக்கு 'சீல்'

மேலும் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;

Update: 2023-05-24 20:37 GMT

திருச்சி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக கடந்த வாரம் 5 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உறையூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 2 மளிகைக்கடைகள், 2 டீக்கடைகள் மற்றும் ஒரு பீடா கடையில் பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதனால், அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்திய கடைக்காரர்கள் தொடர்ந்து அவற்றை விற்பனை செய்து வருவது மீண்டும் கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த கடைக்காரர்களுக்கு 2-வது முறையாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தநிலையில் உறையூர் ராஜேஸ்கண்ணா மளிகை கடை, செந்தில்குமார் மளிகை கடை, உறையூர் ஸ்ரீநாகநாதர் டீ ஸ்டால், சாலைரோடு ரவி டீ ஸ்டால், குரு பீடா ஸ்டால் ஆகிய 5 கடைக்காரர்களும் புகையிலை பொருட்களை தடையை மீறி தொடர்ந்து விற்றதால், 5 கடைகளுக்கும் அவசர தடை ஆணை கடந்த 22-ந்தேதி வழங்கப்பட்டது.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் ஆர்.லால்வேனா உத்தரவின்பேரில் நேற்று 5 கடைகளையும் மாவட்ட நியமன அலுவலர் தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். மேலும் தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பது கண்டறியப்பட்டால் அந்த கடைகளை பூட்டி 'சீல்' வைக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்