வனப்பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க 5 கண்காணிப்பு குழுக்கள்

வனப்பகுதியில் கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க 5 கண்காணிப்பு குழுக்கள் சட்டசபையில் அமைச்சர் மதிவேந்தன் தகவல்.

Update: 2023-04-18 18:44 GMT

சென்னை,

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்தார். அதேபோல் பா.ம.க. உறுப்பினர் அருள் இந்த பிரச்சினையை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பதில் அளித்து கூறியதாவது:-

மதுக்கரை வனச்சரக பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் தீ பிடித்துள்ளது. இந்த காட்டில் காய்ந்த புற்கள் உள்ள பகுதியில் தீ பிடித்துள்ளது. உடனடியாக 40 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயை அணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை சூலூர் விமானப்படை உதவியுடன் தீயணைப்பு பணி விரைந்து நடக்கிறது.

தற்போது 5 கோட்டத்தை சேர்ந்த 210 தீயணைப்பு வீரர்கள் இரவு, பகலாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.90 சதவீதம் காட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புற்கள், மூங்கில்கள் மட்டும் எரிந்துள்ளது. வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடைகாலத்தில் ஏற்படும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனப்பகுதியில் 5 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 25 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்