வானூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- வியாபாரி கைது

வானூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-01 18:45 GMT

வானூரை அடுத்த ஆகாசம்பட்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார், ஆகாசம்பட்டு பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒருவரின் வீட்டில் 26 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது அதனுள் 215 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 33,426 பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

விசாரணையில், இந்த புகையிலை பொருட்களை ஆகாசம்பட்டு ஈஸ்வர் நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 50) என்பவர் பதுக்கி வைத்திருந்ததும், இவர் பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து மொத்தமாக புகையிலை பொருட்களை வாங்கி வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்து விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடைகளுக்கும் வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பாலமுருகனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் பாலமுருகனை வானூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்