5 லட்சம் முத்துசிப்பி குஞ்சுகள் கடலில் விடப்படுகிறது

தூத்துக்குடி கடலில் நாளை மறுநாள் 5 லட்சம் முத்துசிப்பி குஞ்சுகளை விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது;

Update: 2022-09-12 14:42 GMT

தூத்துக்குடி கடலில் நாளை மறுநாள் 5 லட்சம் முத்துசிப்பி குஞ்சுகளை விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

முத்துசிப்பி

தூத்துக்குடி கடல் பகுதியில் முன்பு முத்துகுளித்தல் தொழில் சிறப்பாக நடந்து வந்தது. இதனால் தூத்துக்குடி, முத்துநகரம் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் தூத்துக்குடியில் முத்துக்குளித்தல் தொழில் இல்லாமல் போய்விட்டது. முத்துசிப்பிகள் வளர்ச்சி குறைந்ததால் முத்துகுளித்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த பல தொழிலாளர்கள் சங்குகுளித்தலில் ஈடுபட தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் இழந்த பெருமையை மீண்டும் தக்க வைக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி மத்திய கடல்மீன் வள ஆராய்ச்சி நிலையம் சார்பில் முத்துசிப்பி குஞ்சுகளை ஆய்வகத்தில் வளர்த்து கடலில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

5 லட்சம் குஞ்சுகள்

இந்த நிலையில் தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முத்துசிப்பி குஞ்சுகளை பொரிப்பகத்தில் வளர்த்து வருகின்றனர். இதில் 5 மில்லி மீட்டர் அளவு கொண்ட 5 லட்சம் குஞ்சுகளை தூத்துக்குடி சுனாமிநகர் கடல் பகுதியில் இருப்பு செய்ய (கடலில் விட) உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சுனாமிநகர் சமுதாய கூடத்தில் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முத்துசிப்பி குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அதிகாரிகள், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்