ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாடலிபுத்திரா ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் 1-வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ரெயிலில் ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர். அதில் வெள்ளை நிறத்தில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. மேலும் கடத்தப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் கடத்தி வந்த நபர் யார் என்று தெரியவில்லை.
இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.