இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு படகில் கடத்திய 5 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு படகு மூலம் கடத்திய 5 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை தேடி வருகின்றனர்.

Update: 2023-06-05 18:45 GMT

மண்டபம்

இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு படகு மூலம் கடத்திய 5 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை தேடி வருகின்றனர்.

நடுக்கடலில் வந்த படகு

இலங்கையில் இருந்து ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக தங்கக்கட்டிகள் கடத்தல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள், ஒரு வீட்டில் பதுக்கி வைத்து இருந்த தங்கக்கட்டிகள் என ெமாத்தம் 33 கிலோ தங்கம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் இந்திய கடலோர காவல்படையால் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து மேலும் ஒரு சம்பவமாக, தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள், அதிவேக ரோந்து படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது, மண்டபம் அருகே நல்லதண்ணீர் தீவு பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த பதிவு எண் இல்லாத ஒரு படகை நிறுத்த முயன்றனர்.

தப்பி ஓட்டம்

சுங்கத்துறையினரை கண்டதும் அந்த படகில் இருந்த 3 பேரும் படகை வேகமாக செலுத்தினர். அந்தப்படகை அதிகாரிகள், விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த படகில் இருந்த 3 பேரும், உச்சிப்புளி அருகே உள்ள நொச்சியூரணி மற்றும் புதுமடத்திற்கு இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் படகை ஏற்றி நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து அந்த படகில் இருந்த ஒரு பார்சலை சுங்கத்துறையினர் கைப்பற்றினர். மேலும் தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

5 கிலோ தங்கம்

இதுபற்றி சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மண்டபம் வேதாளை அருகே உள்ள நடுக்கடலில் வந்து கொண்டிருந்த பைபர் படகில் சோதனை செய்ய முயன்றோம். ஆனால் அந்தப் படகு எங்களை கண்டதும் வேகமாக சென்றுவிட்டது. அந்த படகை துரத்தி பிடிக்க முயற்சி செய்தோம். ஆனால் அப்போது, காற்று வீசியதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. அதனால் அந்த படகை பிடிப்பது சவாலாக இருந்தது. அந்த படகில் இருந்த 3 பேரும் நொச்சியூரணி அருகே கடற்கரை பகுதியில் படகை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். அந்த படகில் இருந்த ஒரு பார்சலை கைப்பற்றி உள்ளோம். அதில் சுமார் 5 கிலோ வரை தங்கக்கட்டிகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

இருந்தாலும் தங்கக்கட்டிகளை எடை போட்டு பார்த்த பின்னர் தான் துல்லியமாக எத்தனை கிலோ? என்பது தெரியவரும். தப்பிய கடத்தல்காரர்களிடம் மேலும் தங்கக்கட்டிகள் உள்ளதா? கடலில் ஏதும் வீசி உள்ளனரா? என்பது குறித்து அவர்களை பிடித்த பின்னர்தான் தெரியவரும். பறிமுதல் செய்யப்பட்ட இந்த தங்கக்கட்டியின் மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கும். அதனை கடத்தி வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் மண்டபம் அருகே 33 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்ட நிலையில், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் 5 கிலோ தங்கக்கட்டிகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தப்பிச் சென்ற 3 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக தங்கக்கடத்தல் அதிக அளவில் நடந்து வருவதால், கடத்தலை தடுக்கவும், கடத்தல்காரர்களை கூண்டோடு பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடு்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்