தொடர் மழைக்கு ஒரே நாளில் 5 வீடுகள் இடிந்தன
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் மழைக்கு மேலும் 5 வீடுகள் இடிந்தன.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் மழைக்கு மேலும் 5 வீடுகள் இடிந்தன.
தொடர் மழை
குமாி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 3 வாரமாக விட்டு, விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதற்கிடையே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கனமழையாகவும், சாரலாகவும் இருந்தது. இதனால் பெருஞ்சாணி அணை பகுதியில் அதிகபட்சமாக 24.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. கன்னிமார், கொட்டாரம், ஆரல்வாய்மொழி, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று காலை லேசான மழை பெய்தது.
21 சதவீத குளங்கள் நிரம்பின
மலையோரம் மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணித்து அதற்கு ஏற்ப அணையில் இருந்து கூடுதலாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். தற்போது அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆறு மற்றும் கால்வாய்களில் தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள மொத்தம் 2,040 குளங்களில் 21 சதவீத குளங்கள் நிரம்பி மறுகால் வழியாக பாயத்தொடங்கின. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
5 வீடுகள் இடிந்தன
ஏற்கனவே மாவட்டம் முழுவதும் மழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 5 வீடுகள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்துள்ளன. அதாவது அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 3 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 2 வீடுகள் ஆகும். இதேபோல் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாவட்டம் முழுவதும் 4 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 5, புத்தன் அணை- 21.2, மாம்பழத்துறையாறு அணை- 1.4, முக்கடல் அணை- 2, பூதப்பாண்டி- 7.2, கன்னிமார்- 6.6, கொட்டாரம்- 2.2, சுருளக்கோடு- 21.2, தக்கலை- 2, பாலமோர்- 8.4, ஆரல்வாய்மொழி- 7, அடையாமடை- 6.4, குருந்தங்கோடு- 1.2, ஆனைக்கிடங்கு- 1 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகளின் நீர்வரத்து
அதே சமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 902 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 236 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 386 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டன.
இதேபோல் சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 170 கனஅடி நீர்வரத்தும், அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீரும் திறக்கப்பட்டன. பொய்கை அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி நீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி நீரும் வருகிறது. முக்கடல் அணைக்கு வினாடிக்கு 9.6 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து 8.6 கனஅடி நீர் குடிநீருக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.