டிரைவர் கொலை வழக்கில் நண்பர்கள் 5 பேர் கைது
அகஸ்தீஸ்வரம் அருகே டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தென்தாமரைகுளம்:
அகஸ்தீஸ்வரம் அருகே டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நண்பர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பணத்தகராறில் தீர்த்துக்கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டிரைவர் கொலை
தென்தாமரைகுளம் அருகே உள்ள பூவியூர் காட்டுவிளையை சேர்ந்தவர் ரெஜி. இவரது 2-வது மகன் பெலிக்ஸ் என்ற சிட்டி (வயது 38). இவருக்கு கவிதா (35) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். பெலிக்ஸ் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெலிக்ஸ் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள தேங்காய்காரன் குடியிருப்பு கால்வாய்கரை சாலையில் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை ெசய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பணம் கேட்டு தகராறு
மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொலை நடந்த பகுதியில் ஆய்வு செய்து கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அவரை நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தது ெதரியவந்தது.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
பெலிக்சும் தேங்காய்காரன்குடியிருப்பு சானல்கரையை சேர்ந்த பாலஸ்ரீராமச்சந்திரன் என்ற கண்ணனும் நண்பர்கள். கண்ணன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார் வாங்கியது தொடர்பாக பெலிக்சிற்கு ரூ.15 ஆயிரம் கொடுக்க வேண்டும். அந்த பணத்தை கண்ணன் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி காலை 10 மணியளவில் பெலிக்ஸ் தனது மற்றொரு நண்பரான சந்திரன் என்பவருடன் கண்ணனின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது கண்ணனின் 2 செல்போன்களை பெலிக்ஸ் வாங்கி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
அரிவாளால் சரமாரியாக வெட்டினார்
பின்னர் அன்று இரவு 7 மணிக்கு பெலிக்ஸ் நண்பர் சந்திரனுடன் மீண்டும் கண்ணன் வீட்டிற்கு சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது இன்னொரு நண்பரான சுபாஷ் என்பவர், அந்த பணத்திற்கு தான் பொறுப்பு என்றும், மறுநாள் மாலை 5 மணிக்கு பணம் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் பெலிக்ஸ், சந்திரன் ஆகிய 2 பேரும் கண்ணனின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த கண்ணன், சுபாஷ் மற்றும் பொன்னார்விளையை சேர்ந்த ஜெகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்தனர். தகராறு முற்றியதால் பெலிக்ஸ் அவர்களிடம் இருந்து தப்ப முயன்றார்.
அப்போது அவரை தடுத்து நிறுத்திய கண்ணன் கையில் மறைந்து வைத்திருந்த அரிவாளால் பெலிக்சின் கழுத்து, முகம், கைகள் ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினார். அத்துடன் சுபாஷ் கத்தியால் குத்தியுள்ளார். ஜெகன் கம்பால் தாக்கினார். இதில் பெலிக்ஸ் நிலைகுலைந்து கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத கண்ணன் மீண்டும் பெலிக்சின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
5 பேர் கைது
இதுகுறித்து பெலிக்சின் தந்தை ரெஜி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையில் தொடர்புடைய கண்ணன், சுபாஷ், ஜெகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த வினோத், கோவில்விளையை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் ஆகிய 5பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்த கொலை சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை துணை சூப்பிரண்டு ராஜா தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.