போலி நகையை கொடுத்து 5 பவுன் மோசடி

போலி நகையை கொடுத்து 5 பவுன் நகையை மோசடி செய்த 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-29 18:05 GMT

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நேற்று டிப்-டாப் உடையணிந்து 35 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம், தங்களிடம் உள்ள பழைய நகைகளுக்கு பதிலாக, அதே விலைக்கு புதிய நகை வேண்டும் என கூறி நகை ஒன்றை காண்பித்துள்ளனர். இதையடுத்து அந்த நகையை ஊழியர்கள் வாங்கி சோதனை செய்தபோது, அது தங்கம் என்பது தெரிந்தது. இதையடுத்து அந்த நகைக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியர்கள் கூறினர். ஆனால் அந்த பெண்கள், நீங்கள் தரும் பணம் போதாது என்று கூறிவிட்டு அந்த நகையை வாங்கி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர்கள் கடைக்கு வந்து ஊழியர்களிடம் நகையை விற்பது குறித்து பேசினர்.

அப்போது கடை ஊழியர்களிடம் நீங்கள் சொன்ன தொகைக்கு நகையை வாங்கிக்கொள்ளுங்கள். அந்த பணத்துக்கு புதிய நகை தருமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த பெண்கள் கொண்டு வந்த நகையை வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு 5 பவுன் புதிய நகையை ஊழியர்கள் கொடுத்துள்ளனர். அதனை அவர்கள் வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர்.

இந்த நிலையில் பெண்கள் விற்ற நகையை ஊழியர்கள் சோதனை செய்தபோது அது போலி நகை என்பது தெரிந்தது. அதன்பிறகு தான் தங்க நகையை காட்டி போலி நகையை விற்பனை செய்துவிட்டு அதற்கு பதில் புதிய நகையை அந்த பெண்கள் வாங்கிச் சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி அந்த பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலி நகையை கொடுத்து நகைக்கடையில் 5 பவுன் நகையை 2 பெண்கள் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்