அதிக மாணவர்களை ஏற்றிச்சென்ற 5 ஆட்டோக்கள் பறிமுதல்
திருப்பத்தூரில் அதிக மாணவர்களை ஏற்றிச்சென்ற 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அதிக மாணவ மாணவிகளையும், பொதுமக்களையும் ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, ஹவுசிங் போர்டு, வாணியம்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக அளவு மாணவ, மாணவிகளையும், பொது மக்களையும் ஏற்றி வந்த 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இதேபோல உரிய ஆவணங்கள் இன்றி வந்த 7 ஆட்டோக்கள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம்.கே.காளியப்பன் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.