வாலிபர் கொலையில் 5 பேர் அதிரடி கைது

நெல்லை அருகே வாலிபர் கொலையில் 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-11-22 21:47 GMT

நெல்லை அருகே வாலிபர் கொலையில் 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூலித்தொழிலாளி

நெல்லை அருகே உள்ள நடுக்கல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த குமாரவேல் மகன் நம்பிராஜன் (வயது 29). இவர் பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் இட்ேடரி அருகே உள்ள புதுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பேபிக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

வெட்டிக் கொலை

நேற்று முன்தினம் இரவில் நம்பிராஜன் வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். பேட்டையில் அவரை வழிமறித்த மர்ம கும்பல் திடீரென்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர ேமற்கு போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நம்பிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம்

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில், நடுக்கல்லூரில் கிருஷ்ணஜெயந்தி விழாவை ஒருதரப்பினர் உற்சாகமாக கொண்டாடினார்கள். அது மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடிய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கிருந்த மற்றொரு தரப்பினர் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் விழா நடத்தும் இளைஞர் குழுவினரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், மற்றொரு தரப்பினர் இருக்கும் இடத்திற்கு சென்று தட்டிக் கேட்டனர். இதில் நம்பிராஜனும் ஒருவர் ஆவார். இந்த முன்விேராதம் காரணமாக நம்பிராஜன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் நம்பிராஜன் உறவினர்கள் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமையில் நடுக்கல்லூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் முக்கூடல், பாப்பாக்குடி, பாபநாசம், சேரன்மாதேவி ஆகிய ஊர்களில் இருந்து நெல்லைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பத்தமடை, மேலப்பாளையம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாததால் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்ைத

சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொலையில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளையும், இதற்கு தூண்டுதலாக இருந்தவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். நம்பிராஜனின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். நடுக்கல்லூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை வருகிற 24-ந் தேதிக்குள் கைது செய்யாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். அதுவரை நம்பிராஜனின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சாலை மறியல் 10 மணிக்கு முடிவடைந்தது.

5 பேர் கைது

தொடர்ந்து போலீசாரின் தீவிர நடவடிக்கையால், இந்த வழக்கில் தொடர்புடையதாக கோடகநல்லூரைச் சேர்ந்த பாலசுந்தர் (22), நடுக்கல்லூரைச் சேர்ந்த ஆதிவேலாயுத பெருமாள் (23), கோபாலகிருஷ்ணன் (30), நவநீதகிருஷ்ணன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்தும், வேறு யாருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் நடுக்கல்லூரில் பதற்றம் நிலவுவதால் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கன்னியாகுமரி மாவட்ட சூப்பிரண்டு ஹரிஹரபிரசாத், 8 துணை சூப்பிரண்டுகள், 4 கூடுதல் சூப்பிரண்டுகள், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர கல்லூர் கிராமத்தை சுற்றிலும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் நெல்லை கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்