யானை தந்தங்களை வெட்டிய 5 பேர் கைது

கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-17 19:00 GMT

செங்கோட்டை:

கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே இறந்து கிடந்த யானையின் தந்தங்களை வெட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாக்கு மூட்டை

தமிழக-கேரள எல்லை பகுதியில் இருக்கும் தென்காசி மாவட்டம் புளியரை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானைகள் உள்ளன.

நேற்று முன்தினம் கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள தென்மலை மயிலாடும்பாறை பகுதியில் ஒரு கரையில் பிளாஸ்டிக் சாக்கு மூட்டை கிடந்தது. அதனை அங்குள்ள ஆற்றில் குளிக்க வந்த சிலர் பார்த்து சந்தேகம் அடைந்து, அதனை எடுத்து பிரித்தனா்.

யானை தந்தம்

அப்போது அதில் யானையின் தந்தம் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கல்லாறு வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று யானை தந்தத்தை கைப்பற்றினர். தொடர்ந்து வனத்துறை அதிகாரி அனீஸ்குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.

தந்தங்களை வெட்டி எடுத்தனர்

அதில், கேரள மாநிலம் புனலூர் பகுதியை சேர்ந்த சரத் (வயது 35) என்பவர், யானையின் ஒரு தந்தத்தை வனப்பகுதியில் வீசியது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் பிடித்து நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த குஞ்சுமோன் (40), ஸ்ரீஜித் (30), அனீஸ் (30), பிரசாத் (32) ஆகியோர் சரத்துடன் சேர்ந்து வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு இறந்த நிலையில் கிடந்த யானையின் உடலில் இருந்து 2 தந்தங்களை வெட்டி எடுத்து திருடி உள்ளனர். அதில் ஒன்றை சரத் வீட்டில் பதுக்கி வைத்துவிட்டு, மற்றொன்றை சாக்கு மூட்டையில் கட்டி காட்டில் வீசியது தெரியவந்தது.

5 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து சரத் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு தந்தத்தையும் வனத்துறையினர் கைப்பற்றினர். பின்பு 5 பேரையும் போலீசாரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவர்கள் புனலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்