சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக 5 பேர் பதவி ஏற்பு
சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக 5 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.;
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக இருந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். வக்கீல்களாக இருந்து வந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி 2021-ம் ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி எஸ்.ஸ்ரீமதி, டி.பரதசக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக் ஆகியோருக்கும், அக்டோபர் 28-ந்தேதி ஜெ.சத்யநாராயண பிரசாத்தும் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.
இந்தநிலையில், இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்னர். இதை ஏற்று, இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன்படி 5 கூடுதல் நீதிபதிகளும், நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழா ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியின் சேம்பரில் வைத்து நடந்தது.