வருமான வரி செலுத்துவதில் தமிழகத்துக்கு 4-வது இடம்
இந்திய அளவில் வருமான வரி செலுத்துவதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது என தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
இந்திய அளவில் வருமான வரி செலுத்துவதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது என தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தெரிவித்துள்ளார்.
திறப்பு விழா
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே வருமான வரி அலுவலகத்திற்கு ரூ.14 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி வருமானவரி மற்றும் வருவாய் உறுப்பினர் சங்கீதா சிங் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி, மதுரை வருமான வரி தலைமை ஆணையர் சீமாராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த நிகழ்ச்சியில் வருமான வரித்துறை ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதிகமாக வருமானவரி
விழாவை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி நிருபா்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருமானவரி அலுவலகத்துக்கு நிறைய இடவசதியை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். ஈரோடு, திருப்பூரில் புதிய அலுவலகத்திற்கு வேலை நடந்து கொண்டிருக்கிறது. திருவண்ணாமலையில் சமீபத்தில் ஒரு அலுவலகம் திறந்துள்ளோம். அதைத்தொடர்ந்து நாகர்கோவிலிலும் 13,000 சதுர அடியில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டலத்தில் ரூ.230 கோடி வரி வருவாய் வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு வருவாய் அதிகரித்து வருகிறது. வருவாயில் நாகர்கோவிலை பொறுத்தமட்டில் 35 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வளா்ச்சியை காட்டிலும் நாகா்கோவிலில் வளர்ச்சி கூடுதலாக உள்ளது. நாகர்கோவிலில் அதிகளவில் வருவாய் இருப்பதால், இங்குள்ள மக்கள் அதிகமாக வரி கட்டுகிறார்கள்.
தமிழகம் 4-வது இடம்
மக்களின் வசதிக்காக ஆஸ்க் என்ற வரி செலுத்தும் மையம் திறந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இலக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 800 கோடி ஆகும். அதில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 500 கோடி இலக்கை அடைந்துள்ளோம். இது ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் அதிகம் ஆகிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 74 லட்சம் மக்கள் வரி செலுத்துகிறார்கள். அகில இந்திய அளவில் வருமான வரி செலுத்துவதில் 4-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நிறைய பேர் டி.டி.எஸ் முறையில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் எளிமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை 3 மணி நேரத்தில் திருப்பிக் கொடுக்கிறோம். அந்த வகையில் இந்த வருடம் அதிகபட்சமாக கொடுத்திருக்கிறோம்.
சட்ட நடவடிக்கை
பழைய காலத்தில் கொடுக்காத பிடித்தம் செய்யப்பட்ட பணத்தையும் இப்போது கொடுத்திருக்கிறோம். புதிய வருமானவரி திட்டம் எளிமையானது தான். வருமானவரி கட்டாதவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். வருமானவரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கோர்ட்டு மூலமாக சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி கடந்த ஒரு மாதத்தில் 5 பேருக்கு கோர்ட்டு மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.