கலைத்திருவிழாவில் 490 அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து மாநில அளவிலான கலைத்திருவிழாவில் 490 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். அவர்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழியனுப்பி வைத்தார்.

Update: 2022-12-26 18:01 GMT

கலைத்திருவிழா

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் கலைத்திருவிழா நடத்தி வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் 1286 மாணவ, மாணவிகளும், 9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் 1075 மாணவ, மாணவிகளும், 11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் 889 மாணவ மாணவிகளும் என மொத்தம் 3,250 மாணவ, மாணவிகள் மாவட்ட 208 தலைப்புகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்ற 490 மாணவ, மாணவிகள் மதுரை, கோயம்புத்தூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

கலெக்டர் அனுப்பி வைத்தார்

அவர்கள் 7 பஸ்களில் அழைத்து செல்லப்பட்டனர். கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து, மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் வேதபிரகாஷ், ராஜாஅண்ணாமலை, அமுதா, உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசண்ணா, பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவ, மாணவிகள் அரசு செலவில் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசள், கலையரசி என்ற பட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்