ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயம்

கீரனூர் அருகே கருப்பர் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், காளைகள் முட்டியதில் 48 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-11 18:53 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே திருப்பூர் கிராமத்தில் உள்ள கருப்பர் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர் ரகுபதி, கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி, குளத்தூர் தாசில்தார் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்ற பின் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 696 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

48 பேர் காயம்

இதில் மாடுபிடி வீரர்கள் 200 பேர் 5 சுற்றுகளாக கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இதில் காளைகள் முட்டியதில் புலவாய்ப்பட்டி சக்திவேல் (வயது 53), வீரப்பட்டி சிவசுப்பிரமணி (20), வைத்து செல்வராஜ் (35), வெள்ளப்பிள்ளையார்பட்டி பரமேஸ்வரன் (20), மோசக்குடி தினேஷ்குமார் (30) உள்பட 48 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, டாக்டர் சையது இப்ராகிம் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

பின்னர் 12 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

பரிசு

இதையடுத்து காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

கீரனூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கோட்டு வேலவன் தலைமையில் கீரனூர், உடையாளிப்பட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்