டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதினர்.
கடலூர்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு நேற்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 54 ஆயிரத்து 802 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக கடலூர் மாவட்டத்தில் 122 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
பலத்த பாதுகாப்பு
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து வினாத்தாள்கள் கடலூர் கருவூலத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவை நேற்று முன்தினம் மாலையில் இருந்து மாவட்டத்தில் உள்ள 122 தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதவிர அனைத்து தேர்வு மையங்களிலும் நேற்று அதிகாலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வழக்கமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள், இந்த முறை காலை 9.30 மணிக்கு தொடங்கியது.
தீவிர சோதனை
இதற்காக தேர்வு மையத்திற்கு காலை 8 மணியில் இருந்தே தேர்வர்கள் வரத்தொடங்கினர். அவர்கள் அனைவரும் அந்தந்த தேர்வு மைய நுழைவு வாயிலில் தீவிர சோதனை செய்யப்பட்டனர். அதன் பிறகு ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன் வந்தவர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து தேர்வர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்குள் அனுப்பப்பட்டனர்.
மேலும் காலை 9 மணிக்கு பிறகு வந்தவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதுபோல் தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர், மின்னணு கடிகாரம் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
தனி அறை
தேர்வுக்கான வினாக்கள் கொள்குறி வகையில் இருந்தது. மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. மாவட்டத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 8ஆயிரத்து 51 பேர் தேர்வு எழுத வரவில்லை. 46 ஆயிரத்து 751 பேர் மட்டுமே ஆர்வமுடன் வந்து தேர்வு எழுதினர். இதில் மாற்றுத்திறனாளி தேர்வர்கள், தேர்வு எழுத தரைத்தளத்தில் தனி அறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வானது மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் தேர்வர்கள் அனைவரும் 12.45 மணி வரை தேர்வுக்கூடத்தில் அமர வைக்கப்பட்டு, அதன் பிறகே வெளியே அனுப்பப்பட்டனர். இந்த தேர்வு கண்காணிப்பு பணிகளில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் தலைமையில் முதன்மை கண்காணிப்பாளர் அலுவலர்கள், பறக்கும் படை குழுவினர்கள் மற்றும் நடமாடும் கண்காணிப்பு அலுவலர்களும், ஆய்வு அலுவலர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் 122 தேர்வு மையங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்
சிதம்பரம் வந்த தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான முனியநாதன், சிதம்பரம் பகுதி தேர்வு மையங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் உடனிருந்தார்.