நர்ஸ் வீட்டில் 46 பவுன் நகைகள் கொள்ளை
வள்ளியூரில் பட்டப்பகலில் நர்ஸ் வீட்டில் 46 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை ேபாலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;
வள்ளியூர்:
வள்ளியூரில் பட்டப்பகலில் நர்ஸ் வீட்டில் 46 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நர்ஸ்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ராஜரத்தினம் நகரை சேர்ந்தவர் மரியதாசன் (வயது 58). விவசாயி. இவரது மனைவி கிறிஸ்டி சகாயராணி. இவர் முதலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலையில் கிறிஸ்டி சகாயராணி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மரியதாசன் வள்ளியூர் அருகே உள்ள கோவனேரி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றுவிட்டார். இதனால் அவர்களின் வீட்டில் ஆட்கள் இல்லை.
வேலை முடித்துவிட்டு மாலை 4 மணி அளவில் மரியதாசன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு உள்ளே பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பின் பக்கம் சென்று பார்த்துள்ளார்.
46 பவுன் கொள்ளை
பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 46 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக வள்ளியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி போலீஸ் சூப்பிரண்டு சமயசிங் மீனா, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.