கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ரூ.46¾ கோடி மதிப்பீட்டில் பணிகள்- அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ரூ.46 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-25 18:44 GMT

குடியாத்தம்

குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ரூ.46 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

கவுண்டன்ய மகாநதி

குடியாத்தம் குடியாத்தம் நகரின் நடுவே கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே காமராஜர் பாலம் மற்றும் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் உள்ளது.

மழைக்காலங்களில் மோர்தானா அணையில் இருந்து நிரம்பி வழியும் வெள்ளநீர் செல்லும்போது தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

பணிகள் தொடக்க விழா

இதனை ஏற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், நீர்வளத்துறை சார்பில் குடியாத்தம் நகரத்தில் தாழையாத்தம் முதல் சேம்பள்ளி ரோடு வரை கவுண்டன்ய மகாநதியின் வலது கரையில் ரூ.30.19 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, கெங்கையம்மன் கோவில் அருகில் கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் நீர்வழி போக்கிகளுடன் கூடிய தரைப்பாலம் அமைக்கும் பணி மற்றும் இடது கரையில் ரூ.2.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.பாபு, மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் சி.டி.சண்முகம், செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ், உதவி செயற்பொறியாளர் பி.கோபி, உதவி பொறியாளர் ஆர்.ராஜேஷ், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க.மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

அடிக்கல்

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேற்கண்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

குடியாத்தம் நகரமானது அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நகரம்.

பெருந்தலைவர் காமராஜர் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாறு இடம்பெற்ற நகரம்.

குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணை கட்டுவதற்கு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எ.க.துரைசாமி சட்டமன்றத்தில் பலமுறை பேசியுள்ளார்.

அந்த மோர்தானா அணையும் தலைவர் கருணாநிதி ஆட்சி காலத்தில் என்னுடைய முயற்சியால் கட்டப்பட்டது.

குடியாத்தம் தாலுகாவானது ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருக்கிறது. ஆனால் ஒரு பயணியர் மாளிகைகூட இங்கு கிடையாது. அந்தப் பயணியர் மாளிகையும் நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பொழுது ஏற்படுத்திக் கொடுத்தேன். இந்த நகரில் ஒரு நீதிமன்றத்தையும் நான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்.

தற்பொழுது கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே ெகங்கை யம்மன் கோவில் அருகே நீர்வழி போக்கிகளுடன் தரைப்பாலம், தாழையாத்தம் முதல் சேம்பள்ளி ரோடு வரை சாலை மற்றும் ஆற்றின் இடதுபுரம் நடைபாதை அமைக்க என ரூ.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று இப்பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தங்கோவுக்கு சிலை

விடுதலைப் போராட்ட வீரரும் தமிழறிஞருமான அண்ணல் தங்கோவுக்கு சிலை அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நேரத்தில் அறிவித்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் சிலை அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

மேலும் செய்திகள்