45 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
விக்கிரமசிங்கபுரம் அருகே 45 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.;
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்து அகஸ்தியர்பட்டி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்தன. கடந்த 22-ந்தேதி அந்த வழியாக சென்ற சிறுமி, மாணவர்கள் உள்ளிட்டவர்களை தெருநாய் கடித்து குதறியது. நேற்று முன்தினமும் அந்த தெருநாய் சிலரை கடித்தது. இதில் காயமடைந்த 14 ேபர் அகஸ்தியர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
இதையடுத்து சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் தலைமையில், அகஸ்தியர்பட்டியில் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. கால்நடை டாக்டர் குமார், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகஸ்தியர்பட்டி பகுதியில் சுற்றி திரிந்த 45 தெருநாய்களை பஞ்சாயத்து ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் பிடித்து சென்று, தடுப்பூசி செலுத்தினர்.
வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாய்களை பாதுகாப்பாக வளர்ப்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று பஞ்சாயத்து தலைவர் ஜெகன் தெரிவித்தார். சுகாதார மேற்பார்வையாளர் பெல்பின் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.