சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

திருவண்ணாமலையில் சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-01-24 12:30 GMT

திருவண்ணாமலையில் சித்தர் பீட நிர்வாகி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சித்தர் பீட நிர்வாகி

திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் ஊராட்சி சர்வேசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41).

இவர் திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகில் உள்ள அம்மணி அம்மன் சித்தர் பீட நிர்வாகி ஆவார்.

இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று வேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ரமேஷ் வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அவர் குடும்பத்தினருடன் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர்கள் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் உடைக்கப்பட்டு பீரோக்களின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் கலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

45 பவுன் நகை கொள்ளை

மேலும் வீட்டில் இருந்த 45 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்