தொழில்முனைவோர் திட்டத்தில் 45 நாட்கள் நெசவு பயிற்சி- கலெக்டர் சங்கீதா தகவல்

தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் நெசவு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-07 22:14 GMT


தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் 45 நாட்கள் நெசவு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நோக்கம்

தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானிய கோரிக்கையின் போது இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அறிவித்து இருந்தார். அதற்கான ஆணை கடந்த மாதம் 4-ந் தேதி வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களாக இளைஞர்களுக்கு 45 நாட்கள் கைத்தறி நெசவு பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் அல்லது தொழில் முனைவோர்களாக உருவாக்குதல் ஆகும். மேலும் பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது, கிராமங்களில் உள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பிப்பது என்பது இதன் முக்கிய நோக்கமாகும்.

45 நாட்கள் பயிற்சி

வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத்தொழில் தொடர்பாக குறுகிய கால பயிற்சி அளித்தல் திட்டத்தின் கீழ் இந்த நிதி ஆண்டில் முதற்கட்டமாக 300 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 45 நாட்கள் ஆகும். அதற்கு எழுத படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது 12-ந் தேதியன்று நிலையூர், கைத்தறி நகர் மதுரை ஹேண்ட்லூம் ஹைடெக் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திலும், 15-ந் தேதி டி.குன்னத்தூர் ஸ்ரீமுருகன் தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்