தென்காசியில் குரூப்-1 தேர்வை 4,453 பேர் எழுதினர்

தென்காசி மாவட்டத்தில் 27 தேர்வு மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வை 4,453 பேர் எழுதினர்.

Update: 2022-11-19 18:45 GMT

தமிழகத்தில் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் 27 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வுக்கு மாவட்டத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 262 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 4 ஆயிரத்து 453 பேர் மட்டும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 809 பேர் தேர்வு எழுத வரவில்லை. தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், 'தென்காசி மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 63 சதவீதம் பேர் தான் தேர்வு எழுத வந்துள்ளனர். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எளிதாக செல்லும் வகையில் சிறப்பு பஸ் வசதி போக்குவரத்து துறை சார்பில் செய்யப்பட்டது. தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக 2 துணை கலெக்டர்கள் தலைமையில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்' என்றார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி பேட்டி அளிக்கையில், 'டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெளிப்படை தன்மை இல்லை என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளாரே?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'டி.என்.பி.எஸ்.சி. தேர்வானது வெளிப்படை தன்மையுடன் நடைபெறுகிறது. தற்போது நடைபெறும் குரூப்-1 முதல் நிலை தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். அதுகுறித்து தேர்வாணைய தலைவர் முறையான அறிவிப்பை வெளியிடுவார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்