440 விவசாயிகளுக்கு உடனே புதிய மின்இணைப்பு வழங்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் 440 விவசாயிகளுக்கு உடனே புதிய மின்இணைப்பு வழங்கவேண்டும் என மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2023-03-15 19:45 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நான்குரோடு அருகே உள்ள மின்கழக அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கினார். மின்கோட்ட செயற்பொறியாளர் (பொது) சேகர், பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மின்வட்ட மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தின் கீழ் 25 உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தனித்தனியாக மின்கட்டண வசூல் மையம் அமைத்து மின்நுகர்வோரிடம் மின் கட்டணம் வசூலித்து வருவதுபோல பெரம்பலூர் உதவி மின்பொறியாளர் (நகரம்), தெற்குபகுதி, வடக்கு பகுதி மின்பொறியாளர் அலுவலகங்களில் தனித்தனியாக வசூல் மையம் அமைத்து மின்கட்டணம் வசூல் செய்யவேண்டும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணம் உயர்த்த முடிவு செய்தபடி தமிழ்நாடு மின்சார வாரியம் வீட்டு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

மும்முனை மின்சாரம் வழங்க...

இந்நிலையில் ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின்இணைப்பு இருந்தாலும் ஒவ்வொரு இணைப்பிற்கு தலா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பெரம்பலூர் மாவட்டத்தில் மின்இணைப்பு வேண்டி தயார் நிலை பதிவேட்டில் பதிவு செய்து காத்திருக்கும் 440 விவசாயிகளுக்கு உடனே மின்இணைப்பு வழங்கவேண்டும்.

விவசாய களப்பணிகள் தடையின்றி நடைபெற வசதியாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையும் தினமும் ஏறத்தாழ 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தபடி பகல்-இரவு இருவேளைகளிலும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மின்பழுதுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும்

இதில் மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து 5-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. குறைந்த அழுத்த-உயர்அழுத்த மின்வினியோக பிரச்சினைகள் உள்ளிட்ட மின்பழுதுகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும் என்று கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் உதவிசெயற்பொறியாளர்கள் முத்தமிழ்செல்வன் (டவுன்), செல்வராஜ் (கிராமியம்) மற்றும் உதவிசெயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் மற்றும் விவசாயிகள், சங்கப்பிரதிநிதிகள், மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்