ரூ.44½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.44½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பறிமுதல்
அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். இதில் அவர் தனது உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த பிரகாஷ்(வயது 46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 730 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.44 லட்சத்து 60 ஆயிரம் என்று கூறப்படுகிறது.