காரைக்குடி
காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் உலக சாதனைக்காகவும் 44 மணி நேரம் தொடர் சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, தாசில்தார் மாணிக்கவாசகம் முன்னிலையில் தொடங்கி வைத்தார். 44 மணி நேரம் நடைபெற்ற இச் சதுரங்க போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஒருவர் புத்துணர்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடன் செயல்பட விளையாட்டு இன்றியமையாததாகும். ஒருமித்த கவனத்துடன் செயல்பட உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் ப்ரெய்ன் பாக்ஸ் ஆகியவை இணைந்து தொடர்ச்சியாக 44 மணி நேரம் நடத்தப்பட்ட போட்டியில் 1,437 பேர் பங்கேற்றது சிறப்புக்குரியதாகும். இந்நிகழ்வு சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தாசில்தார் மாணிக்கவாசகம், செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியின் சேர்மன் செல்லப்பன், தாளாளர் சத்தியன், நிர்வாக இயக்குனர் சங்கீதா சத்தியன், கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி, முதல்வர் ராணி போஜன், சோழன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர் நிமலன், மாவட்ட சதுரங்க கழக தலைவர் கருப்பையா, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், முத்துக்குமார், பிரகாஷ் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.