ரூ.425 கோடி உற்பத்தி பாதிப்பு

நூற்பாலைகளில் 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்வதால் ரூ.425 கோடி நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது

Update: 2023-07-19 19:45 GMT

கோவை

நூற்பாலைகளில் 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்வதால் ரூ.425 கோடி நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

சிறு, குறு நூற்பாலைகள்

தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் 600-ற்கும் மேல் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பஞ்சு மில்கள் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பஞ்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், துணிகள் ஏற்றுமதிக்கான வரியை குறைக்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து ஆடைகள் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். வங்கிகளில் கடன் வட்டி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு நூற்பாலைகள் கடந்த 15-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

பஞ்சு விலை

இதனால் கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு நூற்பாலைகள் இயங்காமல் உள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டம் நேற்றுடன் 5-வது நாளை எட்டியது. இந்த போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.85 கோடி நூல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி போராட்டம் நடைபெற்ற 5 நாட்களில் ரூ.425 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதவாது:-

தமிழகத்தில் நூற்பாலை தொழில் பல மாதங்களாக வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் முதல் முறையாக நூல் மற்றும் துணி வகைகளின் ஏற்றுமதி சுமார் 28 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இன்றைய பஞ்சு விலை கண்டி ஒன்றுக்கு 356 கிலோ விதம் ரூபாய் 58 ஆயிரமாக உள்ளது. 40-ம் நம்பர் நூல் விலை ஒரு கிலோவிற்கு ரூ.235 ஆக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பஞ்சில் இருந்து நூல் மாற்றத்திற்கான விலை ரூபாய் ஒன்று மட்டும் தான் கிடைக்கிறது. இதனால் கிலோவிற்கு ரூ.40 வரை நஷ்டம் ஏற்படுகிறது.

11 சதவீத இறக்குமதி வரி

மேற்கண்ட காரணங்களால் வங்கி கடன் திருப்பி செலுத்துதல், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல், மின்சார கட்டணம், ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றை செலுத்த முடியாமல் ஆலைகள் தத்தளித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் நூற்பாலைகள் விரைவில் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்படும். நூற்பாலைகளை காப்பாற்ற மத்திய அரசு பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக பழைய நிலைக்கு 7.5 சதவீதம் அளவிற்கு குறைத்து கொடுக்க வேண்டும்.

ஜவுளி நூற்பு தொழிலுக்கு ஒரே நாடு ஒரே கொள்கையை மத்திய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும். நூல் மட்டும் துணி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஊக்குவிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்நிய நூல் மற்றும் துணி வகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதியாவதை கண்காணித்து தடுக்க மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூற்பாலைகள் இயங்காததால் ஒரு நாளைக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்