தமிழகத்தில் 421 பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணை: மத்திய மந்திரிகள் வழங்கினர்

சென்னை, கோவை, திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் 421 பேருக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரிகள் வழங்கினர்.

Update: 2023-01-20 23:17 GMT

சென்னை,

10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தின்கீழ் பிரதமர் மோடி நேற்று 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக்காட்சி வழியாக வழங்கினார் . நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை (2 இடங்கள்), கோவை, திருச்சி என மொத்தம் 4 இடங்களில் இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய சமூக நீதித்துறை ராஜாங்க மந்திரி ராம்தாஸ் அத்வாலே பங்கேற்று ரெயில்வே, உள்துறை அமைச்சகம், உயர்கல்வித் துறை, சுகாதாரத்துறை, தபால் துறை, வருமானவரித்துறை உள்பட 15 துறைகளில் 29 விதமான பணிகளுக்கு தேர்ச்சி பெற்ற 116 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விதமாக 36 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். எஞ்சிய 80 பேர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பேசும்போது, ரெயில்வே, உள்துறை, தபால்துறை, வருமானவரித் துறை, சுங்கத்துறை உள்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தெரிவித்தார்.

பணி நியமன ஆணை பெற வந்திருந்த கமலப்பிரியா, நிதி ஆகியோருடன் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கலந்துரையாடினார். விழாவில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைமை கமிஷனர்கள் ட்ரிப்டி பிஸ்வாஸ், எம்.ரத்தினசாமி, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துறையின் டைரக்டர் ஜெனரல் கே.அன்பழகன், முதன்மை கமிஷனர் எம்.எம்.பார்த்திபன், கமிஷனர் எம்.ஜி.தமிழ் வளவன், சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் கூடுதல் கமிஷனர் சி.மோகன் கோபு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் 421 பேருக்கு...

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் ரெயில் ஓட்டுனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள், இளநிலை கணக்காளர், கிராமப்புற தபால் ஊழியர், வருமானவரி ஆய்வாளர், ஆசிரியர், டாக்டர், சமூகப் பாதுகாப்பு அதிகாரி, தனிச்செயலாளர், பல்துறை அதிகாரி மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரிய தேர்ச்சி பெற்ற 85 பேருக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

விழாவில், சென்னை வருமானவரித்துறை தலைமை முதன்மை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன், மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை ஆணையர் மாண்டலிகா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று திருச்சியில் நடைபெற்ற விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை ராஜாங்க மந்திரி எல்.முருகன் பங்கேற்று 129 பேருக்கும், கோவையில் நடைபெற்ற விழாவில் சமூகநீதித் துறை ராஜாங்க மந்திரி நாராயணசாமி பங்கேற்று 91 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினர். மொத்தத்தில், நேற்று நடைபெற்ற வேலைவாய்ப்பு மேளாவில் தமிழகத்தில் மட்டும் 421 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்