மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 42 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-30 15:08 GMT

கோத்தகிரி, 

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.30 கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோத்தகிரி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மொரச்சன், துணை பொதுச்செயலாளர் ராஜு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர். அப்போது கட்யினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலுக்கு முயன்ற 8 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதேபோல் பந்தலூர் பஜாரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 24 பேரை தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்