ஒரே தெருவில் 3 வீடுகளில் 41 பவுன் நகைகள், பணம் திருட்டு

தானிப்பாடி அருகே ஒரே தெருவில் 3 வீடுகளில் 41 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-10-05 18:45 GMT

தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே ஒரே தெருவில் 3 வீடுகளில் 41 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை, பணம் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் தானிப்பாடி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வீடுகளில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.

பூட்டி உள்ள வீடுகளை கொள்ளையர்கள் நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடி வருகின்றனர்

இந்த நிலையில் ஒரே தெருவில் 3 இடங்களில் தொடர் திருட்டு சம்பவம் நடந்தேறி உள்ளது.

தானிப்பாடி அருகில் உள்ள பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55), இவரது மனைவி அம்சா இவர் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று தண்டபாணி குடும்பத்துடன் வீட்டின் கதவை உட்புறமாக சாத்திக்கொண்டு மாடியில் படுத்து தூங்கியுள்ளனர். நேற்று காலை கீழே இறங்கி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

வீட்டிலிருந்த பொருட்களும் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள் மற்றும் ஹாலில் இருந்த எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

3 வீடுகளில்

இதே போல அதே தெருவை சேர்ந்த சக்கரபாணி என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து வீட்டில் இருந்த ஒரு பவுன் நகை, எல்.இ.டி டிவி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

மேலும் கருணாகரன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்தும் அவரது வீட்டில் இருந்து ரூ.6 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டிவி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

ஒரே தெருவில் 3 வீடுகளில் ஒரே இரவில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்

இந்த திருட்டு சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 3 பேரும் தனித்தனியே தானிப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்