குரூப்-1 முதல்நிலை தேர்வை 4,025 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-1 முதல் நிலை தேர்வை 4,025 பேர் எழுதினர்.

Update: 2022-11-19 17:47 GMT

குரூப்-1 முதல்நிலை தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 பதவிகளில் காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வு 5 இடங்களில் 22 மையங்களில் நேற்று நடைபெற்றது. தேர்வர்கள் நேற்று காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன், கால்குலேட்டர் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத விண்ணப்பத்திருந்த 6 ஆயிரத்து 212 பேரில், 4 ஆயிரத்து 25 பேர் எழுதினர். 2,187 பேர் தேர்வு எழுதவரவில்லை.

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரியில் தேர்வு நடைபெற்றதை கலெக்டர் கவிதாராமு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்வு வினாத்தாள் குறித்து தேர்வர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க 22 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 9 சுற்றுக்குழு அலுவலர்களும், 2 பறக்கும் படை அலுவலர்களும், 22 ஆய்வு அலுவலர்களாலும் கண்காணிக்கப்பட்டது.

இத்தேர்வு நிகழ்வுகளை 23 வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தேர்வுகள் நடைபெற்று வரும் அனைத்து மையங்களிலும் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு, சுமுகமான முறையில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, உதவி இயக்குனர் (வேளாண்மை) செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்