4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கல்வராயன்மலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-10 16:04 GMT

வாணாபுரம்

கல்வராயன்மலையில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல் ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கல்வராயன் மலை

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிணைக்கும் மலைப்பகுதியாக கல்வராயன் மலை உள்ளது. இந்த கல்வராயன் மலை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க மலைப்பகுதியாகவும் விளங்கி வருகிறது.

அந்தவகையில் கல்வராயன்மலையில் தொட்டிமடுவு என்னும் இடத்தில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை செதுக்கு ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் நடுவத்தை சேர்ந்த பாலமுருகன், பழனிசாமி, டாக்டர்.அருண்குமார், விக்னேஷ்வரன், சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது:-

பொதுவாக பாறையில் காணப்படும் கற்கீரல்கள், பாறையின் சுவர் அல்லது கூரைப்பகுதிகளில் வரையப்படும், ஆனால் இங்கு தரைப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விடம் நீரோடைக்கு அருகாமையிலேயே வரைந்திருப்பது சிறப்பாகும். நீர் வரத்து அதிகமாக வரும் காலங்களில் இந்த ஓவியங்களுக்கு மேலே செல்லும் என்பதனை அறிந்து இங்கு ஓவியம் செதுக்கியிருப்பது கவனிக்கதக்கதாகும்.

வண்ணக்கலவையைக் கொண்டு வரைந்திருந்தால் அவை அழிந்துவிடும் என்பதனால் இங்கு கற்செதுக்குகளாக வரைந்துள்ளனர்.

வில், அம்புடன் மனித உருவம்

இங்கு 10-க்கும் மேற்பட்ட உருவங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால் 7 உருவங்களே காணும் நிலையில் உள்ளன.

அவற்றில் திமில் உள்ள மாடு, மான், பன்றி, நாய் போன்ற விலங்குகளும், அவற்றிற்கு அருகே கையில் வில் மற்றும் அம்புடன் மனித உருவமும், ஆயுதங்கள் இன்றி சில மனித உருவங்களும் காணப்படுகின்றன. இங்கு வரையப்பட்ட கற்செதுக்குகள் பல கோட்டோவியமுறையில் காணப்படுகிறது.

மேலும் உடல் முழுவதும் அல்லது உடலில் சிறு பகுதிகளிலும் உடல் பகுதி செதுக்கப்பட்டும் காணப்படுகிறது. இங்கு காணப்படும் ஓவியங்களில் வேட்டைச்சமூகம் மற்றும் புதிய கற்கால கால்நடை சமூகத்தின் வாழ்க்கை சூழலை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

மேலும், இங்குள்ள கற்செதுக்குகள், கர்நாடக பகுதியில் உள்ள குப்கல், த்மபுரிக்கு அருகேயுள்ள சிலநாயக்கனூர் வனப்பகுதியில் கிடைத்த கற்செதுக்குக்குகளுக்கும், கரிக்கையூர், செஞ்சி அருகேயுள்ள நல்லான் பிள்ளை பெற்றாள், செத்தவரையில் உள்ள சில ஓவியங்களை ஒத்த வடிவத்தில் காணப்படுகிறது.

காட்சி அமைப்பில் மற்றும் உருவத்தோற்றத்தின் அடிப்படையில் இவை சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். இது போன்ற தமிழகத்தில் மிக அரிதாகவே காணப்படும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தடயங்களைப் ஆவணப்படுத்தி பாதுகாப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்