திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம்
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது குறித்தும், பா.ஜ.க. அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வழிகாட்டுதல்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில், தீவிர பரப்புரை மேற்கொண்டு, மக்கள் ஆதரவைத் திரட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூரில் நடந்தது. மாவட்ட தலைவர் ச.பிரபு தலைமை வகித்தார். நகரத் தலைவர் இ.பாரத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் வருகிற 15-ந் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், ஆம்பூரிலும் ெரயில் மறியல் போராட்டம் நடத்துவது, 20-ந் தேதி திருப்பத்தூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருப்பத்தூர் மாவட்ட மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மோடிக்கு அவர் செய்து வரும் தவறுகள் குறித்து 10 ஆயிரம் பேர் கடிதம் அனுப்புவது என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து செய்தித் தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.பி. பதவி பறிப்பு
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை என்பது இந்திய வரலாற்றில் நடக்காத ஒரு செயல். அவதூறு வழக்கு என்றால் ரூ.5,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது தான் இதுவரை நடைபெற்று உள்ளது. ஆனால் ராகுல் காந்தி மீது புகார் அளித்தவரே அந்த வழக்கு மீது தடை உத்தரவு பெறுகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு மீது, ராகுல்காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததன் காரணமாக உடனடியாக தண்டனை வழங்கப்படுகிறது.
தண்டனை வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் அவரது எம்.பி. பதவி பறிக்கப்படுகிறது. கோர்ட்டு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியும், பா.ஜ.க. அரசு சர்வாதிகாரமாக நடந்து கொண்டது. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுகையில் விமான தளம், கப்பல், மின்சாரம் தயாரிப்பு அனுபவம் இல்லாத அதானி குடும்பத்திற்கு வழங்கப்படுவதாகவும், பிரதமர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போது உடன் வரும் அதானி, அந்த நாட்டில் இருந்து வந்தவுடன் அதானிக்கும், அந்த நாட்டுக்கும் உடன்பாடு ஏற்படுகிறது.
ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு
அதானியின் பங்குகள், பங்கு சந்தையில் வீழ்ச்சி அடைந்தும், அதில் எல்.ஐ.சி. நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டிருந்தது. மக்கள் பணத்தை தனிநபர் நிறுவனத்தில் முதலீடு செய்ய யார் அனுமதி கொடுத்தது என கேள்வி கேட்டார். இந்தியா வளர்ச்சி அடைந்து உள்ளதோ இல்லையோ அதானி குழுமம் வளர்ந்துள்ளது.
அவருக்கும், உங்களுக்கும் என்ன சம்பந்தம், நீங்கள் அனுமதிக்காமல் இது நடந்திருக்காது என கேள்வி கேட்டார். மேலும் ராகுல் காந்தி மீண்டும் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பார் என கருதி அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இந்தியாவில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது.
எப்போதெல்லாம் நீதிக்கு பங்கம் வருகிறதோ, அப்போது எல்லாம் காங்கிரஸ் நீதியின் பக்கம்தான் நிற்கும். ராகுல் காந்தி, மோடியை பார்த்து கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்கப்படுவது நியாயமில்லை. கர்நாடகாவில் ராகுல் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும். அல்லது பிரதான எதிர்கட்சியாக இருக்கும். விரைவில் தமிழகத்திலும் அது நடக்கும்.
தெருமுனை பிரசார கூட்டம்
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், இதுகுறித்து குறித்து விளக்குவதற்காகவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 400 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட துணைத் தலைவர்கள் வெங்கடேசன், எம்.பி.கணேஷ், சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் பாரிவள்ளல், விஜயராகவன், முருகன், ஒன்றிய தலைவர்கள் ஜானிஜாவித், முனுசாமி, தண்டபாணி, சாந்தசீலன், கமல்கான், டாக்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.