மறியலில் ஈடுபட்ட 400 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட 400 பேர் கைது

Update: 2023-07-12 13:08 GMT

திருப்பூர்

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையை புகுத்துவதை கண்டித்து சி.ஐ.டி.யு. சார்பில் திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட 400 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தூய்மைப்பணியில் அவுட்சோர்சிங் முறையை பயன்படுத்துவதை கைவிடக்கோரி மறியல் போராட்டம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார்.

தமிழக அரசு சமீபத்தில் அரசாணைகள் 152 மற்றும் 139 மூலம் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் தூய்மைப்பணியை அவுட்சோர்சிங் என்கிற ஒப்பந்த முறையை பயன்படுத்துவதால் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த தினக்கூலி தூய்மைப்பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும். அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். ஊதியக்குறைப்பு, ஆட்குறைப்பு செய்வதை தடுத்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள தூய்மைப்பணியாளர்கள், குடிநீர் திறப்பாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்கள் மறியலில் கலந்து கொண்டனர்.

400 பேர் கைது

இந்த மறியலில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மூர்த்தி, பொருளாளர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ், உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினார்கள். மறியல் போராட்டம் காரணமாக மங்கலம் ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

தெற்கு போலீஸ் துணை கமிஷனர் வனிதா தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 240 பெண்கள் உள்பட 400 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியலால் மங்கலம் ரோடு, பல்லடம் ரோட்டில் ¼ மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்