40 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

Update: 2023-01-28 18:45 GMT

விழுப்புரம்:

காணை ஒன்றியம் பனமலைப்பேட்டையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது, பொன்.கவுதமசிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் மோகன் அனைவரையும் வரவேற்றார்.

புதுமையான சமத்துவபுரம்

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு 12 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையையும், 43 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவையும், 48 பேருக்கு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக முதல் தவணையாக தலா ரூ.26,029 என மொத்தம் ரூ.12 லட்சத்து 49 ஆயிரத்து 392 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் சமத்துவபுரத்தை பற்றி யாரும் கவலைப்படவில்லை, கேட்பாரற்ற நிலையில் இருந்தது. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்து முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல்கட்டமாக 148 சமத்துவபுரங்களில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் தற்போது சமத்துவபுரங்கள் புனரமைக்கப்பட்டு புதுமையான சமத்துவபுரமாக மாறி இருக்கிறது.

மூச்சு இருக்கும் வரை உறுதுணை

மேலும் இந்த ஆண்டு 88 சமத்துவபுரங்கள் பராமரிப்பு பணிக்காக ரூ.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரையில் வெளிப்படை தன்மையில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. மக்களை சந்திக்கிற இயக்கம் தி.மு.க.வை தவிர வேறு எந்த இயக்கமும் கிடையாது.

நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் மக்களை வந்து சந்திப்போம். எங்கள் கடைசி மூச்சு இருக்கும் வரை என்றென்றும் மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

ஆண்டுக்கு 10 ஆயிரம் கி.மீ. வீதம் 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் கி.மீ. சாலைகள் கிராமப்புறங்களில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 390 கி.மீ. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் வீரராகவன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தமிழ்நாடு விவசாய அபிவிருத்திக்குழு உறுப்பினர் அன்னியூர் சிவா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கல்பட்டு ராஜா, மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார், கல்விக்குழு தலைவர் முருகன், காணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், எழிலரசு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். முடிவில் கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் நன்றி கூறினார்.

வளர்ச்சிப்பணிகள் ஆய்வு

முன்னதாக காணையில் ரூ.3.48 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து, வீரமூர் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நெகிழி கழிவு மேலாண்மை அலகை பார்வையிட்டனர்.

பின்னர் திருக்குணம் ஊராட்சி கொசப்பாளையத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அந்நிலத்தில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பனமலை ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பழுதடைந்த 96 குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்