மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

Update: 2022-09-16 07:16 GMT

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

ஒகேனக்கலில் நேற்று முன்தினம் மாலை 60 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 50 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மீண்டும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து இன்று காலை 40 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதில் 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 17 ஆயிரம் கன அடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும் கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்