40 இடங்களில் வேகத்தடை, ஒளிரும் ஸ்டிக்கர்
பொள்ளாச்சி கோட்டத்தில் அதிக விபத்துகள் நடைபெறும் 40 இடங்களில் வேகத்தடை, ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கோட்டத்தில் அதிக விபத்துகள் நடைபெறும் 40 இடங்களில் வேகத்தடை, ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலை பாதுகாப்பு கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் ஏற்கனவே கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-
பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் 40 இடங்கள் விபத்து ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளது. அந்த இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைப்பது, சோலார் சிக்னல் கம்பங்கள் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது போன்ற விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெத்தநாயக்கனூரில் இருந்து சமத்தூர் வரும் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.
படிக்கட்டுகளில் பயணம்
பஸ் நிலையத்தில் கடந்த 4 மாதத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் பஸ்கள் வேகமாக திரும்புவதால் பயணிகள் கிழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே பஸ்கள் உள்ளே வரும் நுழைவு வாயிலில் வேகத்தடை அமைக்க வேண்டும். பஸ் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கி கொண்டு பயணிப்பதை தடுக்க காலை, மாலையில் குறிப்பிட்ட நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிகமாக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக பாரம் ஏற்றி சென்றதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அபராதம் விதிப்பு
கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா கூறுகையில், நியூஸ்கீம் ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் சாலையின ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நகராட்சி, போலீசார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.