தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் 40 பேர் கைது
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொட்டியம், முசிறி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வருடத்திற்கு 11 மாதங்கள் காவிரி தண்ணீர் விட்டு குறுவை, சம்பா, கோடை என்று மூன்று போக நெல் சாகுபடியும், ஆண்டு பயிரான வாழை, கரும்பு, வெற்றிலை, சாகுபடியும் செய்து வந்தனர். ஆனால் தற்போது ஒருபோக சாகுபடி மட்டுமே உள்ளது. இதற்கு காரணம் வடகரை வாய்க்காலில், தலைப்பில் மணல் எடுத்ததால், காவிரி ஆறு பள்ளமாகி வடகரை வாய்க்கால் தலைப்பு மேடாகி விட்டது. எனவே வடகரை வாய்க்கால் தலைப்பை மாயனூர் தடுப்பணைக்கு மாற்றி விவசாயிகளை காப்பாற்ற கோரியும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கடும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காவிரி ஆற்றில் 3 நாட்கள் தங்கும் போராட்டம் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு விவசாய தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று முசிறி காவிரி ஆற்றில் 20 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்பட 40 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து இருந்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.