கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் 40 குடும்பத்தினர் ஒதுக்கி வைப்பு
கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் 40 குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக பொது மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கோவில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் 40 குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதாக பொது மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
மணப்பாறை புதுவாடி கிராமம் குமரம்பட்டி பகுதி மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் அனைத்து தரப்பு மக்களும் வழிபடக்கூடிய காளியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர் தோல்வி அடைந்ததற்கு குமரம்பட்டியை சேர்ந்தவர்கள் தான் காரணம் என கருதி இக்கோவில் திருவிழா மற்றும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் 40 குடும்பத்தினரை ஒதுக்கி வைத்துள்ளனர். இதேபோல் இந்த ஆண்டும் எங்களை ஒதுக்கிவிட்டு கோவில் திருவிழாவை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தினால் ஒருதரப்பினர் வரமறுக்கின்றனர். எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இலவச வீடு
முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெரியமிளகு பாறை பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கூலி தொழில் செய்து வரும் எங்களுக்கு இலவச வீடு குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
உயர்மட்ட பாலம்
ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் கொடுத்த மனுவில், பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை அணுகு சாலை அமைத்தால் சாலையின் இரு புறங்களிலும் உள்ள வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், மக்களுக்கு பயன்தரக்கூடிய பலவிதமான நிறுவனங்கள், தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பால்பண்ணையில் இருந்து துவாக்குடி வரை உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
581 மனுக்கள்
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்றுகள், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, அரசின் நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 581 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 240 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.