லாரி டியூப்களில் சாராயம் கடத்திய 4 வாலிபர்கள் கைது

சின்னசேலம் அருகே லாரி டியூப்களில் சாராயம் கடத்திய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-08-18 16:42 GMT

சின்னசேலம்:

கல்வராயன்மலையில் சாராயம் தயாரித்து மலையடிவார கிராமத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சப்படுவதும், அதனை அங்கிருந்து கடத்தி கிராமங்களில் விற்பனை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் இன்று முன்தினம் இரவு மலையடிவாரத்தில் உள்ள தகரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

4 வாலிபர்கள் கைது

அப்போது லாரி டியூப்புடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், வெள்ளிமலை கொடமாத்தி கிராமத்தை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் ஹரி(வயது 22), சீனிவாசன் மகன் குமார்(25) கலியபெருமாள் மகன் சாமிநாதன் (25), வெள்ளிமலையை சேர்ந்த தேவேந்திரன் மகன் சரவணன் (30) என்பதும், 7 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் 350 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 7 லாரி டியூப்கள், 350 லிட்டர் சாராயம், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்