சென்னை ஐஸ் அவுசில் மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை பலி - இரட்டை குழந்தைகளில் ஒன்றை இழந்து பெற்றோர் தவிப்பு
சென்னை ஐஸ் அவுசில் மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை பலியானது. இரட்டை குழந்தைகளில் ஒன்றை இழந்து பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.;
சென்னை,
சென்னை ஐஸ்அவுஸ் பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ் (வயது 33). இவர், தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு லித்திக் (4), லித்தேஸ் (4) என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர்.
செந்தமிழ், ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை அனைவரும் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அந்தநேரம் லித்திக் வீட்டில் தூங்கி கொண்டிருந்தான்.
தவறி விழுந்தான்
மற்றொரு குழந்தையான லித்தேஸ், மாடியில் உள்ள பால்கனியில் சிறிய நாற்காலியில் ஏறி நின்று சாலையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக லித்தேஸ் திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டான்.
இதில் தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய குழந்தையை சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மாடியில் இருந்து குழந்தை தவறி விழுந்தது லித்தேசின் குடும்பத்துக்கே தெரியாது. ஆஸ்பத்திரியில் குழந்தையை சிகிச்சைக்கு சேர்த்த பின்னரே செந்தமிழுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். பின்னர்தான் அவர் மனைவியுடன் அலறி அடித்துக்கொண்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் லித்தேஸ் பரிதாபமாக உயிரிழந்தான். ஆஸ்பத்திரியில் முறையான சிகிச்சை அளிக்காததே குழந்தை இறப்புக்கு காரணம் என்று செந்தமிழ் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இரட்டை குழந்தைகளில் ஒன்றை இழந்து பெற்றோர் பரிதவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.